ADVERTISEMENT

தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளியாருக்கு வேலை :பெ. மணியரசன் கண்டனம்

04:56 PM May 30, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள கண்டன அறிக்கை: ‘’தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இல்லாத முன்னுரிமை வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணிகள் மட்டுமின்றி தமிழக அரசுப் பணிகளும் வெளிமாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 300 உதவிப் பொறியாளர் நியமனம் செய்யப்பட்டு 29 ந் தேதி 5 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த 300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.


இது குறித்து தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறும் போது..
தொடர்ந்து தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் தொகை தொகையாகக் குடியேறிக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, இந்திக்காரர்களுக்கும் வெளி மாநிலத்தவருக்குமே 100 விழுக்காடு – 95 விழுக்காடு என வேலை தருகிறார்கள். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே வாழ்வுரிமை இழந்து அகதியாகும் அபாயம் அதிகரித்து வருகிறது.



இந்த அநீதியை எதிர்த்து நடுவண் அரசுப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை தர வேண்டுமென்று நாம் போராடி வருகிறோம். கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த போராட்டமும், #தமிழக வேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils சமூக வலைத்தளப் பரப்புரையும் அனைத்திந்திய அளவில் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.



இந்தக் கொடுமைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 - “உதவிப் பொறியாளர்” (Assitant Engineers) பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் நேற்று (29.05.2019) வெளியானது. அதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், தில்லி, சத்தீசுகர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது. இதில் 25 பேர் ஆந்திரத்தெலுங்கர்கள். இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் 50,000 ரூபாய் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.



தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களை பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு! (Letter No. 036904/G.13/ G.131/2019, dated 29.05.2019.)


கடந்த 2016ஆம் ஆண்டு (01.09.2016), தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்ட”த்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான், நேப்பாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே அதிகளவிலான பொறியாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், சற்றொப்ப 1 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும்!



இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள மொழிவழி மாநிலமாகிய தமிழ்நாட்டில், தமிழர்களைப் புறக்கணித்து சகட்டுமேனிக்கு வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டவர்களையும் வேலைக்குச் சேர்ப்பது சட்டவிரோதச் செயலாகும். மற்ற மாநிலங்களில் மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் 100க்கு 100 மண்ணின் மக்களுக்கே வேலை எனச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோன்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும்.



தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசுப் பணிகளிலும், தனியார் துறையிலும் 90% பணிகளை தமிழர் களுக்கே வழங்க வேண்டும், 10% மேல் பணியிலுள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.



தமிழ்நாடு மின் வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கான பணியமர்த்தல் பட்டியலில் உள்ள 39 வெளி மாநிலத்தவரை உடனடியாக நீக்க வேண்டும். நேற்று (29.05.2019) தேர்வானவர்களில் 5 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் பணிய மர்த்தல் ஆணை வழங்கியுள்ளார். அந்த ஐந்து பேரில் வெளி மாநிலத்தவர் இருந்தால், உடனடியாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேலை ஆணை கொடுத்திருந்தால் அதை இரத்து செய்ய வேண்டும்.



இல்லையேல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் அரசமைப்புச் சட்டப்படி மண்ணின் மக்களுக்கு வேலை கோரியும், வெளி மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இரத்து செய்ய வலியுறுத்தியும் விரிவான போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT