
பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ள நிலையில், சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 14- ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரதமர் மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருக்கிறார். பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 07.50 மணிக்குப் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து, பிரதமர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிற்குச் செல்கிறார்.
அங்கு, மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, கலைவாணர் அரங்கில் முக்கியச் சந்திப்புகளை நிகழ்த்த உள்ளார். இந்தச் சந்திப்பிற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிரதமரை நேரில் சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், மீண்டும் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று பிற்பகல் 01.35 மணிக்கு தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், அடையாறு ஐ.என்.எஸ், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 4 அடுக்கு பாதுகாப்புப் போடப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வாகனச் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்பு படையின் தென் மண்டல ஐ.ஜி. அலோக் வர்மா தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை நடக்கவிருக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.