Skip to main content

“வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
PM Modi inquired about the effects of floods CM MK Stalin information
கோப்புப்படம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மீட்பு மற்றும் நிவாரணம் பணிகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை கூறி, உடனடியாக நிவராண நிதியை விடுவிக்க கோரியுள்ளேன். வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொள்வார் என்று பிரதமர் மோடி கூறினார்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு  கேட்டுக் கொண்டார்.  தென் மாவட்டங்களில்  வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும்  இந்த பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்