PM Kissan samman nithi farmers should repay the amount

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தில்,போலியான புரோக்கர்கள் மூலம் போலி ஆவணங்களைக் கொடுத்து,போலி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு பெரும் மோசடி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை செய்து முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

Advertisment

இந்தத் திட்டத்தில், ஏராளமானவிவசாயி அல்லாத நபர்கள் புரோக்கர்கள் மூலம் 500, 1000 என கமிஷன் பெற்றுக்கொண்டு அவரவர் வங்கிக் கணக்கிற்கு 6,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளனர். இந்தத் திட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி வரை மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தவறான ஆவணங்கள் கொடுக்கப்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பல்வேறு குழுக்கள் மூலம் விசாரணை செய்து கண்டறியப்பட்டுள்ளது. இதில் தவறான ஆவணங்கள் கொடுத்து பணம் பெற்றுள்ள நபர்களின் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கி வைக்கப்பட்டுள்ளதோடு அந்தக் கணக்கில் இருந்த தொகைஅரசு கணக்கிற்கு பரிமாற்றப்பட்டு வருகிறது.

Advertisment

இந்தத் திட்டத்தில் ஏராளமானவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணத்தை முன்கூட்டியே எடுத்துச் செலவு செய்து விட்டதால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறும் பொருட்டு உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வடகுரும்பூர், குஞ்சரம், இறையூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை ஆகியோர் சார்பில் தண்டோரா மூலம் தவறான வழிகளில் பணம் பெற்றவர்கள் உடனடியாக வங்கியில் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதையடுத்து பலர் பணத்தை வங்கிகளில் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பிரதமர் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் நிவாரணம் பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்துள்ளோம். தற்போது நாங்கள் பெற்ற 2,000 ரூபாயை திருப்பி வங்கியில் செலுத்தி வருகிறோம். ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுத்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2,000 ரூபாய் பெற்ற நாங்கள் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுத்ததை யாரிடம் போய் திரும்பிக் கேட்பது என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிடம் அரசு பணத்தை முறைகேடாகப் பெற்றதற்கு போலீஸ் வழக்கு, சிறை,நீதிமன்றத் தண்டனை என்று உங்களைப் போன்றவர்கள் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து வருவதைக் கண்டு சந்தோஷம் அடையுங்கள். அரசுப் பணத்தை ஏமாற்றி பெற முயன்றதற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்று எண்ணிக் கொள்ளுங்கள். தவறான வழியில் பெற்ற பணத்தை முறையாக திருப்பிச் செலுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள் அதிகாரிகள்.