ADVERTISEMENT

'பிரதமரின் வேளாண்  நிதி உதவி' திட்ட முறைகேடு! அ.தி.மு.க. கூட்டுறவு சங்க தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு!

12:22 PM Sep 07, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி, 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

அதேசமயம் இந்த திட்டம் ஒரு சிலருக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் பல விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்ததையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாவட்ட, வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்த பகுதி வேளாண் துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைதள ரகசிய குறியீட்டு எண்களை மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பலரது கணக்குகளில் 2000 ரூபாய் முதல் தவணையாக 3 மாதங்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் இரண்டாவது தவணை தொகை ரூபாய் 2000 வரவு வைக்கப்பட்டது.

இதனிடையே இந்த திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், கரூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களது வங்கி கணக்கிலும் முதல் தவணையாக 2000 ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் இதுபோன்ற பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விசாரணை மேற்கொண்டதில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட 80,752 பேரில் 40 ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்றும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அதையடுத்து முறைகேடாக சேர்க்கப்பட்டவர்களை பட்டியலில் இருந்து நீக்கி அவர்களின் வங்கி கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய பணத்தை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்திலுள்ள 226 வங்கி கிளைகளில் தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு போலி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை மாவட்ட ஆட்சியரின் பொதுக்கணக்குக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பிற மாவட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்தும் ரூபாய் 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ஆட்சியரின் பொது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலிருந்து பி.எம்.கிஸான் பணத்தை எடுத்தவர்களிடம் தொகையைத் திரும்ப பெற வருவாய் மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போலி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் திட்ட நிதி செலுத்தப்பட்டு அவர் அதனை எடுத்திருந்தால் அவரது மற்றொரு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் தொடர்புடைய 13 தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே விசாரணைகளை தீவிரப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் வழக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மோசடி, தொழில்நுட்பங்களை தவறாக கையாளுதல், கூட்டாக இணைந்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கணினி மையம் நடத்தி வரும் அ.தி.மு.கவை சேர்ந்த மாத்தூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்க தலைவர் ஆராஅமுதன், அரங்கநாதன், மனோகரன், அருண்குமார், ராஜசேகர், வெண்ணிலா மற்றும் இருவர் என ஆறு நபர்களை பிடித்து, கடலூர் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமரின் விவசாயிகள் நிவாரண நிதியில் மோசடி செய்தவர்கள் அடுத்தடுத்து பணிநீக்கம், கைது, வழக்கு என விசாரணை வேகம் எடுப்பதால் மோசடி நபர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதேசமயம் கிராமப்புற பகுதிகளில் மோசடி செய்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் நிலையில் விளை நிலங்களே இல்லாத நகரப்பகுதிகளில் மோசடியில் ஈடுபட்ட கணினி மையம் நடத்துபவர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகள் இன்னும் விசாரிக்கபடாமல் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது பாரபட்சமான விசாரணையை நடைபெறுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT