
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அதேசமயம் இந்தத் திட்டம் ஒருசிலருக்கு மட்டுமே செயல்படுத்தப் படுவதாகவும் பல விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. அதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாவட்ட, வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளைத் தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்தப் பகுதி வேளாண் துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைத்தள ரகசிய குறியீட்டு எண்களை மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத நபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுபயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பலரது கணக்குகளில் 2,000 ரூபாய் முதல் தவணையாக 3 மாதங்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10-ஆம் தேதி இத்திட்டத்தில் 6-ஆவது தவணை தொகையான ரூபாய் 17, 500 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார். அப்போது மோசடியாக சேர்க்கப்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் இரண்டாவது தவணை தொகை ரூபாய் 2,000 வரவு வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டுபெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 60,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் மோசடியாக 30,000 பேர் சேர்க்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கு சமீபத்தில் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக 2,000 ரூபாய் பணமும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாகப் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த காரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளாக இல்லாதோருக்கு,தவணைத் தொகைவழங்கப்பட்டுள்ளதாகக் கடலூர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது. மேலும் இதுபோன்று மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறை துணை இயக்குனர் தலைமையில் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் முகாமிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்தப் பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தபோது திருவள்ளூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ரகசிய குறியீட்டு எண் மூலம் மோசடியாக பயனாளிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இதுகுறித்து விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று பிரதமரின் 'கிசான் நிதி' உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை செய்தார்.
அப்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை 1 வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் முறைகேடாகச் சேர்ந்து இருப்பவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)