Advertisment

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு தரவில்லை என்ற கோபத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது...!

PM Home scheme issue

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் பசுமை வீடு திட்டத்திலும் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள கூவாகம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜ்குமார் வயது 25.

Advertisment

சென்னையில் ஜே.சி.பி ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வருவது வழக்கம். இவருக்கு திருமணமாகி ஊரில் மனைவி பிள்ளைகள் என குடும்பம் உள்ளது. இவர்களுக்கு இட நெருக்கடி காரணமாக வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு ஒரு வீடு வழங்குமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.

Advertisment

அதிகாரிகள் இவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற ராஜ்குமார், நேற்று மாலை 3 மணி அளவில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், ராஜ்குமார் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது ஒரு ஊரில் ஆண்டுக்கு சில பயனாளிகளை தேர்வு செய்து வீடு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பயனாளிகளுக்கு தொடர்ந்து வீடு வழங்கப்படும். மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த ராஜகுமாரின் தாயார் மீராவிற்கும் அவரது அண்ணன் ராஜுவுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் ராஜ்குமாருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் படிப்படியாகத்தான் ஏழை எளிய பயனாளிகள் பயன் பெறுவார்கள். அதற்கு காத்திருக்காமல் ராஜ்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது, வருத்தத்துக்குரியது என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ராஜ்குமார் தற்கொலை முயற்சி சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த திருநாவலூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வீடு கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe