பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை கொடூரமாக கொன்ற பள்ளி மாணவன்!

Plus 2 student incident special girl in Salem

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள குறுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பெருமாயி (55). வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்குத் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதனால் பெருமாயி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

பிப். 12ம் தேதி காலை பெருமாயி, வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு கல் கிடந்தது. மர்ம நபர்கள் அவருடைய தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்தது. தகவல் அறிந்த பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் சந்திரலேகா மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெருமாயி வீட்டிற்கு வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்தும், அவருடைய உறவினர்கள், அக்கம்பத்தினர் ஆகியோரிடமும் விசாரித்தனர். இதில் கிடைத்த தகவலின்படி, சம்பவத்தன்று குறுக்கப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பெருமாயி வீட்டில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் சிறுவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவன், பெருமாயியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டோம், “கொலை நடந்த நாளன்று பெருமாயி வீட்டிற்கு 17 வயது சிறுவன் சென்றுள்ளார். தாகத்திற்குத் தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளார். பெருமாயிக்கு ஆதரவாக யாரும் வீட்டில் இல்லாதது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த சிறுவன், அவரை திருமணத்தை மீறிய உறவிற்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாயி அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மேலும், தப்பாக நடக்க முயற்சித்தால் ஊரைக்கூட்டிச் சொல்லி விடுவேன் என்று சைகையால் சொல்லி இருக்கிறார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிறுவன் பெருமாயி எங்கே கத்தி கூச்சல் போட்டுவிடுவாரோ என்று பதற்றம் அடைந்துஇதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுவன் பெருமாயியை கீழே தள்ளி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டார். அந்தச் சிறுவன் அதே ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்” என்கிறார்கள் காவல்துறையினர்.

சிறுவனை கைது செய்த செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அடித்துக் கொலை செய்த சம்பவம் இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Salem student woman
இதையும் படியுங்கள்
Subscribe