Skip to main content

பொதுப்பணித்துறை ஏரியில் கொள்ளை போகும் மணல்..!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Plundering sand in the public works lake ..!

 

திண்டிவனம் அருகே பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் சட்டத்திற்குப் புறம்பாகத் தொடர்ந்து மர்ம நபர்கள் லாரிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இவர்களின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இங்குள்ள பொதுப்பணித்துறை ஏரியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியில் கடந்த ஒரு வருடமாக இரவு நேரங்களில் சட்டத்திற்குப் புறம்பாக மர்ம நபர்கள் லாரிகளில் செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

 

இதனால் ஏரிகளில் ஒரு பகுதி மட்டும் அதிகமான பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் இங்கு தேங்குகின்ற தண்ணீர் விவசாயத்துக்குப் பயன்படாமல் அங்கேயே காய்ந்து விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏரிப்பகுதி முழுவதுமாக நீர் நிரம்பி இருக்கின்ற நேரங்களில் வெளியூர் நபர்கள் இந்த பகுதியில் வரும் போது இங்கு இருக்கின்ற ஆழம் தெரியாமல் இறங்கி உயிர் பலி ஏற்படுகின்ற அவல நிலையும் உருவாகியிருக்கின்றது.

 

எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கடந்த காலங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கின் மீது நடவடிக்கை எடுத்த உயர்நீதிமன்றம் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்