Skip to main content

விளையாடினாலும் வெடிக்கும்! -சிறுவர்களைப் பதம் பார்த்த சிவகாசி பட்டாசு! 

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

பட்டாசுக்குத் தடைகோரி வழக்கு, உச்ச நீதிமன்ற நிபந்தனைகள், பட்டாசு ஆலைகள் மூடல் என தொழில் நெருக்கடியால் தொடர்ந்து தத்தளிக்கிறது சிவகாசி. கள்ள வரவான சீனப்பட்டாசுகள் ஆபத்தானவை என்று சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்கள் கூறிவரும் நிலையில், சிவகாசி தயாரிப்பான ஃபேன்சி ரக பட்டாசு வெடித்து மூன்று சிறுவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 

 

CRACK


சிவகாசி காரனேசன் காலனி பகுதியில்  ‘ஐஸ்க்ரீம் பால்’ வடிவில் ஏதோ ஒன்று கிடந்திருக்கிறது. அந்த ஏரியா சிறுவர்களான நவீன்ராம், சமிஸ்கா, பிரசன்னா ஆகியோர் அதைக் கையில் எடுத்து விளையாடியிருக்கின்றனர். அதில் ஒட்டப்பட்டிருந்த செலபன் டேப்பை ஒருவன் பிய்த்துப் பார்த்தபோது, சூடம் போல ஏதோ ஒட்டப்பட்டிருந்திருக்கிறது. உடனே சிறுவர்கள் மூவரும் குஷியாகி, சூடம் கொளுத்தி சாமி கும்பிட்டு விளையாடுவோம் என்று அங்கு வீடு கட்டுவதற்காக குவிக்கப்பட்டிருந்த மணலுக்குள் அந்தப் பந்தைப் புதைத்து, மேற்பகுதியில் தீக்குச்சியால் உரசிப் பற்ற வைத்திருக்கின்றனர். அடுத்த நொடியே, அந்த ஏரியாவே அலறும் விதத்தில் பெரும் சத்தத்துடன் வெடித்திருக்கிறது அந்தப் பந்து. சிறுவர்கள் மூவரும் தூக்கி எறியப்பட்டனர். 

 

CRACK

 


இந்த விபத்தில் தலைமுடி கருகி, விழிகள் பொசுங்கி, மணிக்கட்டுக்குக் கீழே வலதுகை முறிந்து தொங்கிவிட்டது. சிறுமி சமிஸ்காவுக்கு வலது கை விரல்கள் மூன்றிலும் படுகாயம். பிரசன்னாவுக்கும் தலைமுடி கருகிவிட்டது. கண்களில் பாதிப்பு. உடனடியாக, இவர்களின் பெற்றோர் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். விஷயம் அறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய காக்கிகள் விசாரணை நடத்தினர். 

 


வானத்தில் பறந்துசென்று வெடிக்கும் ஃபேன்சிரக பட்டாசில் தூக்குமருந்து என்று சொல்லப்படும் மணிமருந்தை பிளாஸ்டிக்கிலான பந்து ஒன்றி அடைத்து வைத்திருப்பார்கள். மேலே சென்று, வண்ண ஒளிச்சிதறல்களுடன் வெடிக்கும் இந்த ஃபேன்சிரக பட்டாசு தரமின்றி தயாரிக்கப்பட்டிருந்தால், வெடிக்காமல் அப்படியே தரையில் விழுந்துவிடும். அப்படி விழுந்த ஒரு பந்துதான் இது. அந்த ஏரியாவில் தீபாவளிக்குத்தான் பலரும்  வெடித்திருக்கிறார்கள்.  ஒரு மாதம் கடந்தும், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்த அந்த வெடிப்பந்து  வீரியம் குறையாமல் இருந்திருக்கிறது. அதனால்தான், திரி இல்லாத நிலையிலும்,  பற்றவைத்ததும் வெடித்திருக்கிறது.  

 


‘போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையவேண்டும்;  விசாரணைகளைச் சந்திக்க வேண்டும்’ என்ற பயத்தில் சிறுவர்களின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.  பிறகென்ன? வெடியைத் தரமற்று தயாரித்த பட்டாசு உரிமையாளர் தப்பிவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்