தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்வது மூலம் ரூ.1 கோடி வருமானம் ஈட்டியதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் குப்பை தொட்டியில்லாத நிகழ்ச்சியில் பேசினார்.
நேற்று நடைபெற்ற சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, 2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்வதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.
இந்த நிலையில் திருச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க விழா திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்து அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘அசோகர் காலத்திலேயே மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வந்தது. மரக்கன்றுகள் நடுவதால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இந்த பணியை செய்யும் மாநகராட்சியை பாராட்டுகிறேன். மரம் நடுவதை வளரும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு முக்கியம். இது தொடர்பான குறும்படங்களை சினிமா தியேட்டர்களில் மட்டும் திரையிடாமல், நடமாடும் வாகனங்கள் மூலம் தெருக்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ஒளிபரப்ப வேண்டும்’ என்றார்.
மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசும் போது: திருச்சி மாநகராட்சியை அழகுபடுத்த 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 65 வார்டுகளிலும் தலா 100 கன்று வீதம் 6500 மரக்கன்றுகள் நடப்படுகிறது. டெல்லி, ஐதராபாத் மாநகராட்சிகளுக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகராட்சியில் தான் நர்சரி கார்டன் வசதி உள்ளது. திருச்சி மாநகராட்சியில் 6 லட்சம் மரக்கன்று உற்பத்தி செய்யப்படும். இவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு நகரம் அழகுபடுத்தப்படும். மரம் நடும் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும். மாநகராட்சியில் 20 பூங்காக்கள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இன்னும் 20 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அவையும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு கமிஷனர் கூறினார். விழாவில் நகர பொறியாளர் அமுதவல்லி, உதவி கமிஷனர் தயாநிதி உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
குப்பை தொட்டி இல்லாத திருச்சி: கமிஷனர் ரவிச்சந்திரன் மேலும் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் தினமும் 450 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை கிடங்குக்கு செல்லாதபடி விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1 வருடத்தில் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. அந்த பணம் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மக்கும் குப்பைகள் 26 இடங்களில் உள்ள நுண்ணுர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது. திடக்கழிவுகள் சிமென்ட் தயாரிக்க வழங்கப்படுகிறது. விரைவில் திருச்சி மாநகரம் குப்பை தொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும். குப்பைகள் அனைத்தும் வீடுகளிலேயே வந்து சேகரிக்கப்பட்டு விடுவதால் குப்பைகளை கொட்ட தொட்டிகள் தேவைப்படாது. இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ‘மாற்றம் மாணவர்கள்’ இயக்கம் திருச்சி மாநகரில் உள்ள 350 கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
பிளாஸ்டிக் விற்பனை தடைசெய்து தமிழக அரசு உத்தவிட்ட நிலையில் கடந்த வருடத்தில் தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து 1 கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)