Advertisment

நகைக்கடையில் திட்டமிட்டு கொள்ளை! 

Planned robbery at the jewelry store!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வடக்கு வீதியில் ஒரு நகைக்கடை கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் உரிமையாளர்கள் நித்தீஷ், லோகேஷ் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர். வழக்கம்போல் நேற்று காலை கடை உரிமையாளர்கள் கடை, ஊழியர்களுடன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கீழே கிடந்தது. இதனைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களை காணவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முதல் மற்றும் 2-வது மாடிகளுக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் காணவில்லை.

Advertisment

3-வது மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள இரும்பு கதவு, ஒரு நபர் உள்ளே நுழையும் வகையில் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு அதன் வழியாக உள்ளே புகுந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் கதவு அருகே சிறிய கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் கிடந்தன. இந்த கடையை கொள்ளையடிப்பதற்காக ஏற்கனவே நோட்டம்விட்ட ஒரு கொள்ளை கும்பல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச் சென்றதை கண்காணித்துள்ளது. அந்த கும்பல், கட்டிடத்தின் பின்புறத்தில் ஏணி மூலமாக 3-வது மாடிக்கு ஏறி சென்று, வெல்டிங் கியாஸ் மூலம் இரும்பு கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 75 பவுன் நகைகள், 30 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

Advertisment

கொள்ளை கும்பல், கடையில் இருந்த லாக்கரையும் உடைக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடை நிர்வாகத்தினர் இதுபற்றி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரடி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த கைரேகை, தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த கடையில் பதிவான கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். அதோடு கள்ளக்குறிச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் ராக்கி கொள்ளை நடந்த நகைக்கடையில் இருந்து பஸ் நிலையம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதனிடையே கொள்ளையர்கள் பயன்படுத்திவிட்டு போட்டுவிட்டுச்சென்ற கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நகைக்கடையில் கொள்ளை கும்பல் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. 3 முதல் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். நகைக்கடையை ஒட்டியுள்ள கட்டிடங்கள் வழியாக ஏணி வைத்து நகைக்கடையின் 3-வது மாடிக்கு வந்த கொள்ளை கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கதவை வெட்டி எடுத்து விட்டு, உள்ளே புகுந்து கடையின் மின் இணைப்பையும், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் இயக்கத்தையும் துண்டித்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குறிப்பாக அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளை கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் ஊத்தங்கரை நகைக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது பயன்படுத்தப்பட்ட சிறிய அளவிலான கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் மேற்கண்ட நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டுள்ளதா? எனவும் விசாரித்து வருகிறோம் என்கிறது போலீஸ்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe