/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4199.jpg)
தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று துவங்கப்பட்டது. கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
அதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழக முதலமைச்சர் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது. நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், சிலருடைய குடும்ப சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவினை முறையாக சாப்பிடுவதில்லை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1586.jpg)
மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தற்போது, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் பணியை இன்று திருக்குவளையில் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு இன்று முதல் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 5,327 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர்களானகாமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், கலைஞர் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல் படுத்தினார். நமது தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)