Skip to main content

ஆவடி அருகே ரயிலை கவிழ்க்க சதியா? நள்ளிரவில் நடந்த சம்பவம்!

 

piece of wood in Avadi train track

 

திருநின்றவூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டை வைத்தது தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

 

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் இரயில்கள் திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் திருவள்ளூர் தாண்டி திருநின்றவூர் அருகே ஒரு எக்ஸ்பிரஸ் இரயில் வந்தபோது, அந்த இரயில் இஞ்ஜினில் தென்னைமரத் துண்டு ஒன்று சிக்கியிருக்கிறது. இதனை அறிந்த இரயில் ஓட்டுநர் சாதுரியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். அதன்பின் இரயில் ஓட்டுநர் அந்த தென்னைமரத் துண்டை அப்புறப்படுத்தி அருகில் உள்ள ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி அந்த மரத் துண்டை ஒப்படைத்துள்ளார். 

 

piece of wood in Avadi train track

 

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் அந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், அந்த வழியாக செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள சந்தேகம் தரக்கூடிய சில நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார். 

 

தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டு இருந்தது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருவள்ளூர்  மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் வீடு ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்துள்ளது. இவர் தனது வீட்டில் இருந்த தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளத்தின் ஓரமாகப் போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் சிலர் அந்த தென்னைமரத் துண்டை எடுத்து எக்ஸ்பிரஸ் இரயில் செல்லும் தண்டவாளத்தில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

 

சமீபத்தில் திருச்சி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் லாரி டயர்களை வைத்திருந்தனர். இது தொடர்பாக விசாரித்து வரும் இரயில்வே காவல்துறையினர் ரயிலை கவிழ்க்க சதியா எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது திருநின்றவூர் பகுதியில் இரயில் தண்டவாளத்தில் தென்னைமரத் துண்டை வைத்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !