/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3224.jpg)
கோடையில் குதுகலமாகபிச்சாவரம் படகு சவாரி உள்ளதாகச் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து செல்கிறார்கள்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இது சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகள் ஆகும். கடல் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்தக் காடுகளில் இயற்கை மூலிகை மரங்களான சுரபுண்ணை, தில்லை சங்குசெடி, பீஞ்சல், பூவரசு, வெண்கண்டல், சிறுகண்டல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகை தாவர செடிகள் உள்ளன. இதில் தில்லை மரம் நடராஜர் கோவிலின் தல விருச்சகமாகும். ஆகையால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளதால் கடந்த 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. இங்குத் தற்போது 100-க்கும் மேற்பட்ட அளவில் துடுப்பு படகுகள் மற்றும் இயந்திர படகுகள் உள்ளன. இந்தச் சுற்றுலா மையத்திற்கு அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலம், கோடை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து சதுப்பு நில காடுகளில் உள்ள பந்தல்போல் அமைந்தள்ள சுரபுண்ணை மரங்கள் உள்ளிட்ட இயற்கை அரண்களை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_294.jpg)
இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட கார்,வேன், பேருந்து உள்ளிட்ட வாகனம் மூலம் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதனிடையே திமுக அரசு பதவியேற்ற, முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பிச்சாரவம் சுற்றுலா மையம் உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சுற்றுலா மையத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். அதற்கான பணிகள் இன்று வரை தொடங்கவில்லை. அரசு அறிவித்தவாறு சுற்றுலா மையத்தை மேம்படுத்தினால் இப்பகுதி வளர்ச்சி அடைவதோடு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_968.jpg)
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தைச் சேர்ந்த தேவி என்பவர் குடும்பத்துடன் படகுசாவரி செய்து மகிழ்ந்தார். பின்னர் அவர் கூறுகையில் பிச்சாவரத்தில் படகு சவாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செய்து மகிழ்ந்து சென்றேன். தற்போது குடும்பத்துடன் படகு சவாரி செய்தோம். கடந்த முறை படகு சவாரியில் அதிக இடங்களைச் சுற்றிக்காண்பித்தார்கள். தற்போது வனத்துறை தடை செய்துள்ளதுஎன ஒரு வாய்காலை மட்டுமே காட்டுகிறார்கள். இது புதியதாக வருபவர்களுக்குத் தெரியாது. சதுப்பு நிலகாடுகளில் உள்ள வாய்கால்களில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்குத் தரமான உணவு, தங்குமிடம் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும். படகு சவாரி செய்யும் நேரத்தைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)