






தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘ராஜன் ஐ கேர்’ வழங்கும் வாழ்நாள் முழுவதும் இலவச கண் சிகிச்சை திட்டத்தின் துவக்க விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "எனக்கும் பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்குமான உறவு கால் நூற்றாண்டு காலம் கடந்தும் தொடர்கிறது. ‘எங்கயோ ஒரு மூலையில் இருந்த என்னைப் போன்றவர்களை, இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது பத்திரிகை புகைப்பட கலைஞர்கள்தான். ஏதாவது ஒரு சிறிய சம்பவம் புகைப்படமாகப் பத்திரிகையில் வெளிவந்தால் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடும். என்னுடைய இந்த வளர்ச்சிக்குப் புகைப்பட கலைஞர்கள் தான் காரணமாக இருந்தனர். எனவே நீங்கள் உடல் நலத்தோடு இருந்தால் என்னைப் போன்று பலர் வளர்வார்கள். உங்களுக்கு மருத்துவ ரீதியாக எந்த உதவியாக இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
மேலும் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச கண் சிகிச்சை மற்றும் கண்ணாடி வழங்கும் திட்டத்தின்படி அடையாள அட்டையைச் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர், ராஜன் ஐ கேர் மோகன், செய்தித் தொடர்பு இணைஇயக்குனர் மேகவர்னன் ஆகியோர் வழங்கினர்.