Pharmacy that sells tobacco injections and pills to students sealed

தூத்துக்குடி கடற்கரை பகுதி மற்றும் மாநகர பகுதிகளில் மீனவர்கள் சிலர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தூத்துக்குடி டவுன் ஏ.எஸ்.பி. மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட பாகம் எஸ்.ஐ. சிவகுமார், தலைமை காவலர்கள் சண்முகநாதன், முருகேசன் அடங்கிய போலீஸார் சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். இதில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை டி. ஜெட்டி பாலம் பகுதியில் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த 22 வயதான சாட்டை மாரி செல்வம் என்பவர் போதை ஊசி, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Advertisment

அவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து டெப்னடால் , அல்ப்ர சோலம், நைட்ரோ மெட், டைடால் உள்ளிட்ட 50 போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தாளமுத்து நகர் பகுதியில் உள்ள ஏ.எம்.எஸ். மெடிக்கலில் இருந்து மருத்துவரின் பரிந்துரை சீட் எதுவும் இல்லாமல் போதை ஊசி, போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி கடந்த ஓராண்டாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போதை ஊசி, போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஏ.எம்.எஸ். மெடிக்கல் குறித்து போலீசார், மாவட்ட மருந்துகள் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மருந்துகள் ஆய்வாளர் ஆல்வின் ஜோஸ் தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஸ்டோரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை, காவல்துறையினர் முன்னிலையில் மெடிக்கலை பூட்டி சீல் வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட முழுவதும் அனைத்து கிராம பகுதிகளிலும் போதை இல்லா தமிழகம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், மாவட்ட தலைநகரத்திலேயே மீனவர்களையும், பள்ளி கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து போதை ஊசி, போதை மாத்திரை விற்பனை அமோகமாக சேல்ஸ் ஆகி வந்திருப்பது தூத்துக்குடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி