திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரம் வழியாக பாண்டிச்சேரி டூ பெங்களுரூவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மிக முக்கியமான இந்த சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும். இதனால் செங்கம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்தை சரிப்படுத்த சாலையை இரண்டாக பிரித்து சாலையின் நடுவில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல், இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் தடுப்பு சுவற்றில் மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றது. இன்று மே 16ந் தேதி காலை செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற பெட்ரோல் நிரப்பியிருந்த டேங்கர் லாரி தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி கடைக்காரர்களும் பயந்துபோயினர். சுமார் 4 மணி நேரத்துக்கு பின்பே விபத்து நடந்த லாரியை அகற்ற காவல்துறையினர் முன்வந்தனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அப்பகுதி சமூக ஆர்வலர்கள், சாலையை ஆக்ரமித்து வைத்துள்ள கடைகளால்தான் இத்தனை பிரச்சனைகள் என இங்குள்ள அனைவருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். யாராவது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பிரச்சனையை கிளப்பிவிட்டுவிடுகிறார்கள். இதனால் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பயப்படுகிறார்கள். போலீஸும் மாமூல் வாங்குவதால் காவல்நிலையம் எதிரே நடக்கும் இந்த அத்துமீறலை கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்கின்றனர்.