வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கிடையே நாளை வழக்கம் போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் , செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், 'நிவர்' புயல் கரையைக் கடக்கும் போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.