
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காடு பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓரம் இரு பக்கங்களிலும் அருந்ததிய இனமக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் பகுதியை ஒட்டி அரசுக்குச் சொந்தமான நிலம் இருப்பதாகவும், அதை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தி தங்களுக்கு பட்டா தரும்படி கேட்டு போராடி வருகிறார்கள். அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த 35வயது ராஜா என்ற இளைஞர், நேற்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி உள்ளார்.
இந்தத் தகவல் போலீசாருக்கு தெரியவரவே, இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் தர்மகுடிக்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது கையில் பெட்ரோலுடன் தன் மீது ஊற்றி கொள்ள ராஜா தயாராக இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, ராஜா கையில் வைத்திருந்த பெட்ரோலை பறிக்க முயன்றுள்ளார். அப்போது பெட்ரோல், இன்ஸ்பெக்டரின் கண் மற்றும் உடல் மீது சிதறியுள்ளது. அதனால், அவருக்கு கண் மற்றும் உடலில் எரிச்சல் ஏற்பட்டது.
உடனடியாக உடனிருந்த காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்று சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.