Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கொள்ளைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் -ராமதாஸ்

Published on 20/05/2018 | Edited on 20/05/2018
Petrol and diesel price


பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  35 காசுகள் உயர்ந்து ரூ.79.13 ஆகவும். டீசல் விலை 28  காசுகள் உயர்ந்து ரூ.71.32 ஆகவும் உள்ளன. இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.
 

 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து விடக்கூடாது என்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் மே 13-ஆம் தேதி முதல் தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 70 காசுகளும், டீசல் விலை ஒரு ரூபாய் 76 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. எரிபொருட்களின் விலைகளை தினமும் மாற்றும் முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரையிலான 6 நாட்களில் மட்டும் எரிபொருட்களின் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 
 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 13.85 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15.42 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 19 நாட்களாக நடைமுறைப்படுத்தப்படாத விலை உயர்வை ஈடு கட்டும் வகையில் ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அனால் இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழும் என்ற அச்சத்தில் அந்த முடிவை கைவிட்ட எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை அளவுக்கு அதிகமாக உயர்த்தி வருகின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த  19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன.இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை ஆகும். 
 

ஒருகாலத்தில் ஒருசில தரப்பினரால் மட்டும் பயன்படுத்தப்படும் பொருளாக இருந்து வந்த பெட்ரோலும், டீசலும் இப்போது அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. இந்தியாவின் முன்னேற்றத்திர்க்கும் எரிபொருட்கள் தான் அடிப்படை ஆகும். பெட்ரோல், டீசல் விலைகள் அளவுக்கு அதிகமாக உயர்ந்தால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும். இதைக்கருத்தில்கொண்டு பெட்ரோல், டீசல் விலைகள் எப்போதும் கட்டுக்குள் வைக்கப்பட வேண்டும். அனால், அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலைகள் வருவாய் ஈட்டும் ஆதாரமாக மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன. இது தவறான கொள்கை. உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இந்தியாவில் கடந்த 2014 – 2015-ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது பெருநிருவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும். கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதெல்லாம், இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் வரிகள் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். 
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்து எரிபொருட்களின் விலை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.