Advertisment

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல் விலை: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

PETROL, DIESEL GST ADMK CHIEF OPANNEERSELVAM STATEMENT

Advertisment

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (12/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த்தொற்று ஒருபுறம் மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் வருவாய் இழப்பு, விஷம் போல் ஏறிக்கொண்டு வரும் விலைவாசி உயர்வு என பல்வேறு காரணிகள் தமிழக மக்களை வாட்டி வதைக்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த விலைவாசி உயர்விற்கு பதுக்கல், கடத்தல் என பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக விளங்குவது தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலைதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

பெட்ரோல், டீசல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி, டீசல் விலை உயர்வின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் வாகனக் கட்டணங்கள் உயர்ந்து, அனைத்து வகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். இந்த விலை உயர்வு காரணமாக பாசனத்திற்காக டீசல் பம்பு செட்டுகளைப் பயன்படுத்தும் விவசாயிகள், சந்தைக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் வியாபாரிகள், சாதாரண பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்தப் பாதிப்புக்கு ஆளாயிருக்கிறார்கள்.

Advertisment

தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது. தி.மு.க. அரசு 07/05/2021 அன்று ஆட்சிப் பொறுப்பையேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதங்களுக்கு மேலாகியுள்ள சூழ்நிலையில், 12/06/2021 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 ரூபாய் 43 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 64 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தி.மு.க. அரசு அமைந்த பிறகு, பெட்ரோல் விலை 4 ரூபாய் 28 காசாகவும், டீசல் விலை 4 ரூபாய் 99 காசாகவும் உயர்ந்துள்ளது.

தற்போதைய தமிழகத்தின் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி உயர்த்திக் கொண்டே போவது என்பது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுத்து பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும் என்றும், எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினைக் குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் மற்றும் டீசலை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கருத்தின் அடிப்படையிலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்பவும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கவும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பெட்ரோல் மற்றும் டீசலை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

chief minister admk GST petrol Diesel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe