Advertisment

விண்ணைத் தொடும் எரிபொருள் விலை: ரூ.8 சாலை வரியை நீக்க வேண்டும்! ராமதாஸ்

petrol bunk

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவற்றை நேரடியாக பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான சாலைவரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76.59 ஆகவும், டீசல் விலை 68.24 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எரிபொருள் விலை இதை விட ரூ.50 காசு வரை கூடுதலாக உள்ளது. போக்குவரத்துக்கு மட்டுமின்றி அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் பயன்படும் எரிபொருட்களின் விலையை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே 11 மற்றும் 12 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 9 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11.13 ரூபாயும், டீசல் விலை ரூ.12.11 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1.33 வீதம் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். பெட்ரோல் என்பது வாகன எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், டீசல் என்பது விவசாயம், மீன்பிடி, மின்சார உற்பத்தி போன்ற வாழ்வாதாரம் சார்ந்தவற்றுக்காகவும் பயன்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது டீசல் விலையை உலகச் சந்தையுடன் இணைத்து கண்மூடித்தனமாக உயர்த்துவது ஊரக பொருளாதாரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும்.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.34.98 மட்டும் தான். ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 76.59 ஆகும். அதாவது அடக்கவிலையை விட 120% வரி மற்றும் இலாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை அடக்கவிலை ரூ.37.21 மட்டும் தான். அதன்மீது வரிகள் மற்றும் லாபமாக 81 விழுக்காடு சேர்க்கப்பட்டு ரூ. 68.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் பெட்ரோல், டீசல் மீது இந்த அளவுக்கு வரிகள் விதிக்கப்படுவதில்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் எரிபொருட்கள் மீது இந்த அளவுக்கு வரிகளை விதிப்பது நல்ல பொருளாதார இலக்கணங்களுக்கு எதிரானது. இது பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

petrol bunk

எரிபொருட்கள் மீதான அநியாய வரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 2014&ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016&ஆம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது. இந்த வரி உயர்வை ரத்து செய்தாலே பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்து விடுமென்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 8 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ரூ.8 சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து ஏழை மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு ஏமாற்றமாக்கியது.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவற்றை நேரடியாக பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி, மறைமுகமாக வாகனங்களைப் பயன்படுத்தும் மக்களையும் கடுமையாக பாதிக்கும். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான சாலைவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், அவற்றை பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

petrol bunk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe