/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/68_90.jpg)
கோவில்பட்டி அருகே காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி(29). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் சங்கிலி பாண்டி மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், இன்று காலை 9 மணிக்கு கயத்தாரில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி தனது இரு சக்கர வானத்தில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கயத்தாறு - கடம்பூர் நெடுஞ்சாலை சத்திரப்பட்டி விலக்கு அருகே கார் மோதி விபத்துக்குள்ளாகி சங்கிலி பாண்டிய இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முட்புதருக்குள் சிதைந்த நிலையில் கிடந்த சங்கிலி பாண்டியனின் உடலை கைப்பற்றி, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கினர். . மோப்ப நாய் ஜியா மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் செடி கொடிகளில் இருந்த ரத்தச் சிதறலை பார்த்த போலீசார், இது விபத்து அல்ல என்று சந்தேகமடைந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து வருகின்றன. இதனிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கயத்தாரில் இருந்து கடம்பூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த சங்கிலி பாண்டியை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரது பைக்கின் மீது மோதியுள்ளது. அதன் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கிலி பாண்டியனை கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் சந்தேகத்தின் பேரில் கயத்தாறு மற்றும் காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த ஐந்து நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - மூர்த்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)