
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று 29 ஆம் தேதி மாலை சென்னையில் பெய்த மழையின் போது வீசிய காற்றால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூரையின் அடியில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி ஏராளமான இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த ஊழியர் கந்தசாமி (வயது 56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த தகவலறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார், மேலாளர் வினோத் மீது 304 ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் பங்க் மேலாளர் வினோத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பங்கின் உரிமையாளரான அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடிவருவதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.