Skip to main content

விண்ணைத் தொடும் எரிபொருள் விலை: ரூ.8 சாலை வரியை நீக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 02/04/2018 | Edited on 02/04/2018


 

petrol bunk


பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவற்றை நேரடியாக பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான சாலைவரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76.59 ஆகவும், டீசல் விலை 68.24 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எரிபொருள் விலை இதை விட ரூ.50 காசு வரை கூடுதலாக உள்ளது. போக்குவரத்துக்கு மட்டுமின்றி அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் பயன்படும் எரிபொருட்களின் விலையை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே 11 மற்றும் 12 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 9 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11.13 ரூபாயும், டீசல் விலை ரூ.12.11 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1.33 வீதம் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது  எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். பெட்ரோல் என்பது வாகன எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், டீசல் என்பது விவசாயம், மீன்பிடி, மின்சார உற்பத்தி போன்ற வாழ்வாதாரம் சார்ந்தவற்றுக்காகவும் பயன்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது டீசல் விலையை உலகச் சந்தையுடன் இணைத்து கண்மூடித்தனமாக உயர்த்துவது ஊரக பொருளாதாரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும்.
 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி   வரி, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.34.98 மட்டும் தான். ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 76.59 ஆகும். அதாவது அடக்கவிலையை விட 120% வரி மற்றும் இலாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை அடக்கவிலை ரூ.37.21 மட்டும் தான். அதன்மீது வரிகள் மற்றும் லாபமாக 81 விழுக்காடு சேர்க்கப்பட்டு ரூ. 68.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  உலகில் வேறு எந்த நாட்டிலும்  பெட்ரோல், டீசல் மீது இந்த அளவுக்கு வரிகள் விதிக்கப்படுவதில்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் எரிபொருட்கள் மீது இந்த அளவுக்கு வரிகளை விதிப்பது நல்ல பொருளாதார இலக்கணங்களுக்கு எதிரானது. இது பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

 

petrol bunk


 

எரிபொருட்கள் மீதான அநியாய வரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மத்திய ஆட்சியாளர்கள்  உணர்ந்ததாகத் தெரியவில்லை. 2014&ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016&ஆம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது.  இந்த வரி உயர்வை ரத்து செய்தாலே பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்து விடுமென்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு  ரூ. 8 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ரூ.8 சாலை மேம்பாட்டு  வரி விதிக்கப்படும் என்று அறிவித்து ஏழை மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு ஏமாற்றமாக்கியது.
 

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவற்றை நேரடியாக பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி, மறைமுகமாக வாகனங்களைப் பயன்படுத்தும் மக்களையும் கடுமையாக பாதிக்கும். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான சாலைவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், அவற்றை பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
 

இவற்றுக்கெல்லாம் மேலாக  பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Gasoline tank roof collapse incident

 

சென்னையில் பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மழையின் போது வீசிய காற்றால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூரையின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.