
சிதம்பரம் அருகே பள்ளிப்படை மற்றும் கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான தில்லையம்மன் நகர், ஞானஜோதி நகர், அன்னை நகர், வாகீச நகர் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட நகர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தில்லையம்மன் நகரில் தனியார் செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அந்நிறுவனம் செல்ஃபோன் கோபுரம் அமைக்கும் பணிகளை தொடர்ந்தது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (27ஆம் தேதி) சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து, செல்ஃபோன் கோபுரம் அமைப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அதனைத் தடைச் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், கொத்தங்குடி மு.ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.