ADVERTISEMENT

கர்ப்பிணி மனைவியின் 24 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி மனு! -மருத்துவக்குழு பரிசோதனை நடத்த உத்தரவு!

11:57 PM Aug 01, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உடல்நலக்குறைவால் அவதிப்படும் கர்ப்பிணி பெண்ணின் கருவைக் கலைப்பது குறித்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி குழு பரிசோதனைக்குப் பிறகு முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், மூளையில் மாறுபட்ட உணர்ச்சி ஆகியவற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

24 வார கர்ப்பிணியான அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவிற்கு சிகிச்சை அளிக்க கொடுக்கப்படும் மருந்துகளால், கருவில் உள்ள சிசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இருவரையும் காப்பாற்றும் வகையில் சிகிச்சை அளிப்பது கடினம் என, கர்ப்பிணி பெண்ணின் கணவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் அளித்த பரிந்துரையில், கருவைக் கலைத்தால் பெண்ணைக் காப்பாற்றலாம் என்றும், ஆனால் உயர் நீதிமன்ற அனுமதி இருந்தால் மட்டுமே கருவைக் கலைக்க முடியுமென கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மனைவியின் 24 வாரங்கள் ஆன கருவைக் கலைக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.வி.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, கர்ப்பிணிப் பெண்ணின் நிலையைக் கருத்தில் கொண்டும், நரம்பியல் நிபுணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டும், கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 20 வாரங்களுக்குப் பிறகும் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் கே. கோவிந்தசாமி ஆஜராகி, கோவை அரசு மருத்துவக்கல்லூரியின் கருக்கலைப்பு குழு, கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதித்த பின்னர், நரம்பியல் நிபுணரின் பரிந்துரையில் திருப்தி அடைந்தால் மட்டுமே கருவைக் கலைக்கலாம் என விளக்கம் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, கர்ப்பிணிப் பெண்ணை கோவை மருத்துவக் குழு, பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். பரிசோதனைக்குப் பின் நரம்பியல் நிபுணரின் அறிக்கையில் அந்தக் குழு திருப்தி அடைந்தால், சுயநினைவில் இருந்தால் கர்ப்பிணிப் பெண்ணின் ஒப்புதலையோ, இல்லாவிட்டால் கணவரின் ஒப்புதலையோ பெற்று, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையிலேயே கருக்கலைப்பு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT