Skip to main content

கல்லூரிகளுக்கான இறுதி பருவத் தேர்வை ரத்து செய்ய கோரிய மனு! பதிலளிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு!

Published on 20/07/2020 | Edited on 21/07/2020
Petition seeking cancellation of final exams for colleges! Central and state governments ordered to respond!

 

 

பொறியியல்,  தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புகளின் இறுதி பருவத் தேர்வையும் ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் அனைத்து பட்டப் படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி,  சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், பள்ளி, கல்லூரிகள் கரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.  தற்போதைய சூழலில், கரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம்தான் தணியும், பள்ளி, கல்லூரிகள் 2021-ம் ஆண்டு ஜனவரியில்தான் திறக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால், அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகிவிடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும், தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதி பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். இறுதி பருவத் தேர்வு நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.