Skip to main content

‘நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை கோரி மனு’  - விசாரணை ஒத்திவைப்பு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing

கரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் ஒரு சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு மே 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இது மதம் சார்ந்த விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை. மேலும் இதற்கு எந்த அனுமதியும் கேட்க வேண்டியது இல்லை.  பொதுவாக விழாக்களில் அனுமதி கேட்பது என்பது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு பொருத்தப்படக் கூடிய ஒலிபெருக்கி வெளியில் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். எனவே இந்த விழாவை நடத்திக் கொள்ளலாம்” என உத்தரவிட்டிருந்தார். 

Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing

அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பின்பற்றி இந்த விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழா நடத்தப்பட்ட பின்பு சர்ச்சையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. மேலும் இது சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு ஒன்றும் உள்ளது. இந்த உத்தரவுகளை எல்லாம் மறைத்து மனுதாரர் தனக்குச் சாதகமான உத்தரவைப் பெற்று விட்டார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு சார்பிலும் இந்த வழக்கில் விரிவான விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 25 ஆம் தேதி (25.06.2024) மதியம் 02.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அப்போது இரு தரப்பு வாதங்களையும் விரிவாக நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உயர்நீதிமன்றத்தை நாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Ex-minister who approached the High Court MR  Vijayabaskar

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர். இதனையடுத்து கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவைக் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்படிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் முன்ஜாமின் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது சகோதரரும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Next Story

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறு; போலீசார் குவிப்பு

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Dispute caused by Digital Banner; Police build up

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறில் கோவில் பண்டிகை கலவரக்காடான சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யாமணி அம்பேத்கர் நகரில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த பன்னிரண்டாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். அந்த டிஜிட்டல் பேனரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது.

இதில் இரண்டு தரப்பு மோதி கொண்ட நிலையில் நான்கு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சாரார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.