Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்க கோரிய மனு... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
Petition requesting daily food for school students ... Central and state governments ordered to respond

 

பள்ளி மாணவர்களுக்குத் தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது தொடர்பாக திட்டத்தைத் தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்குச் சத்தான உணவு வழங்குவதை உறுதிசெய்யவும், 1962 - 63ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்ததாக கூறியுள்ளார். 

 

1982ஆம் ஆண்டு இந்த மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தப்பட்டதாகவும், தற்போது 43 லட்சம் மாணவர்கள் சத்துணவு திட்டம் மூலம் பயனடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். கரோனா பரவலைத் தடுக்க 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை எனவும், அதனால் பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படவில்லை எனவும், மாறாக மாணவர்களின் பள்ளிகள் மூலம் சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தினமும் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது தொடர்பாக திட்டத்தைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு வழங்குவதில் சிரமங்கள் இருக்கலாம் எனவும், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், . கிராமப்புறங்களில் பஞ்சாயத்துகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி, மனுவுக்குப் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்