Advertisment

டெண்டர் கோருவதற்கான இடைக்காலத் தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!!

Petition in High Court seeking removal of interim ban on tenders

Advertisment

பொது விநியோகத் திட்டத்திற்காக துவரம் பருப்பு,பாமாயில், சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்குத் தடை விதிக்கக் கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 2021 ஏப்ரல் 26ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5ஆம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயில் சமையல் எண்ணெய்க்கான டெண்டர் அறிவிப்பும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிபந்தனைகளின்படி, டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில்71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில், கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (26.05.2021) விசாரித்த மதுரைக் கிளை நீதிபதி வி.எம். வேலுமணி, தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்க கோரி தமிழக அரசுத் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக மதுரைக் கிளையைத்தான் அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Advertisment

அதற்கு கரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்குப் பருப்பு, எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டியுள்ளதாகவும், இடைக்காலத் தடை விதித்த நீதிபதி தலைமையில்தான் இரு நீதிபதிகள் அமர்வு உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர். இன்று மதியம் அல்லது நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Chennai highcourt MADURAI COURT
இதையும் படியுங்கள்
Subscribe