ADVERTISEMENT

சுப்ரமணியன் சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

07:29 PM Jun 08, 2021 | suthakar@nakkh…


பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி மீது அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இதுதொடர்பாக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில், பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் அளித்த புகாரில் தமிழக அரசு விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், மாநிலங்களவை பாஜக உறுப்பினரான சுப்ரமணியன் சாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிய கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுவதாகவும், இதில் ஆளுநர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும், தலைமை செயலாளரை அழைத்து விளக்கம் பெற வேண்டுமென வலியுறுத்தியதோடு, இதே நிலை நீடித்தால் ஆட்சி கலைப்பிற்கு பரிந்துரைப்பதை விட வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதை, குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி, சுப்பிரமணியம் சாமி கடிதம் எழுதியது அரசியல் சட்டத்திற்கும், அவர் வகிக்கும் எம்பி பதவிக்கான விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு மே 29ஆம் தேதி அளித்த புகாரில், "சுப்ரமணியன் சாமிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும்" என தமிழக டிஜிபி-க்கும், அவரை ராஜ்யசபாவுக்கு பரிந்துரைத்த பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கும், காவல்துறைக்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்குகளின் விசாரணையில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் சுப்ரமணியம் சாமி பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT