Petition filed by Senthil Balaji dismissed!

சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

Advertisment

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதே சமயம் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

Advertisment

Petition filed by Senthil Balaji dismissed!

இதற்கிடையே அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கக்கோரியும், வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்கக்கோரியும் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி அல்லி அமர்வில் இன்று (08.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது, வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவைத்தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதோடு கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment