Skip to main content

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் மனு

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Petition to court to take action on Shivaji Krishnamurthy

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். 

 

தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசினார். அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

 

இந்த பின்னணியில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி இருந்தார். 

 

இதையடுத்து, ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் கடந்த ஜனவரி 14ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.


சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அவதூறாக இருப்பதாக கூறி, அவதூறு வழக்கு தாக்கல் செய்ய சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு ஜனவரி 15ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் அவதூறு வழக்கிற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Coimbatore election result case The court barrage of questions

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன என பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக பாஜகவிற்கு ஆதரவான அமைப்பு சார்பில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரகண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க எனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு வந்திருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. 

Coimbatore election result case The court barrage of questions

கடந்த 2019 ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதேபோல எங்களது பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களும்  நீக்கப்பட்டுள்ளன. ஆனால் வாக்களர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கப்படுவதற்கு முன்பு உரிய விசாராணை நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்றே மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா மற்றும் நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் இன்று (30.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி வாதிடுகையில், “கடந்த ஜனவரி மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. மனுதாரர் தொகுதியில் வசித்து வரவில்லை. மாறாக அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

Coimbatore election result case The court barrage of questions

கடந்த 2021 ஆம் ஆண்டே மனுதாரரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், “ஜனவரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?. படிவம் 6 மற்றும் 7 ஐ ஏன் பயன்படுத்தவில்லை. வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Holiday notification for Chennai High Court

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (01.05.2024) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறைக்கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.