காவல்துறையினர், சிறைத்துறையினர், கைதிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தக்கோரிய வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

police coronavirus samples tested chennai high court

இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா பரவலை தடுக்கும் பணிகளில், முன்னணியில் இருந்து இரவு, பகலாக பணியாற்றும் காவல் துறையினருக்கு, போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. கரோனா பாதிப்புக்குள்ளாகும் காவல்துறை மற்றும் சிறைத் துறையினரின் எண்ணிக்கை, தினந்தோறும் அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புழல் சிறையில் கரோனா தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. இதுநாள் வரை அங்குள்ள கைதிகளுக்கு சோதனைகள் நடத்தப்படவில்லை.தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதனால், காவல் துறையினர், சிறைத்துறையினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு முறையாக பரிசோதனை நடத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான முழு உடல் கவசம், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் கைதிகளுக்கு, ஏற்கனவே முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுசம்பந்தமாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு, டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சிறைத்துறை டிஜிபி ஆகியோர் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

chennai high court coronavirus police tn government
இதையும் படியுங்கள்
Subscribe