Petition against eviction of beachgoers; The High Court ordered the police to respond

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத்தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடற்கரை மற்றும் பூங்காக்களை நாடும் மக்களை இரவு 09:30 மணிக்கு மேல் காவல் துறையினர் அங்கிருந்து வெளியேற்றி விடுகின்றனர்.

எனவே கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை பின்னிரவு வரை அனுமதிக்கக் கோரி தமிழக போலீஸ் டிஜிபிக்கும் மற்றும் பெருநகர சென்னை காவல் ஆணையருக்கும் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்தக்கூடாது எனக் காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (28.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது குறித்து டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.