/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_143.jpg)
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்வேந்தன். 35 வயதான இவர்.. சென்னையில் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி முத்துப்பிரியா. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். பொன்வேந்தன் தனக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அதே போல், முத்துப்பிரியா பாலமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில், முத்துபிரியா தான் வேலை செய்யும் இடத்தில் அங்கிருக்கும் ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவழித்து வந்தனர். நாளடைவில் இந்த விவகாரம் முத்துபிரியாவின் கணவர் பொன்வேந்தனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்குள்ளான பொன்வேந்தன் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால், அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது ஆண் நண்பருடன் பழகி வந்தார்.
இதனைத் தொடர்ந்து, முத்துப்பிரியா தனது குடும்பத்தை விட்டுவிட்டு தன்னுடைய ஆண் நண்பருடன் செல்ல முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 8ஆம் தேதியன்று முத்துப்பிரியா தனது 3 மகன்களையும், காதல் கணவரையும் விட்டு விட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து ஊரைவிட்டுச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்வேந்தன் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். ஆனால், அவர் எங்குத் தேடியும் கிடைக்காததால் பொன்வேந்தன் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்தார்.
கடந்த 9ஆம் தேதி மாலை 5 மணியளவில் பாலமேடு காவல் நிலையத்திற்கு வந்த பொன்வேந்தன் யாரும் எதிர்பாராத சமயத்தில் தன் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசாரும் அப்பகுதி மக்களும் பொன்வேந்தன் மீது பற்றியிருந்த தீயை அணைத்தனர். பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்வேந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் தனது ஆண் நண்பருடன் சென்ற நிலையில், தந்தையும் இறந்துவிட்டதால், அந்த மூன்று குழந்தைகளும் பரிதவித்து நிற்கின்றனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலமேடு போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் நண்பருடன் மனைவி சென்றுவிட்டதால் கணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)