/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_5021.jpg)
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி நகரம் உடையார்குடி தியாகராஜ தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (50). இவர்தங்க நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று (31-08-24) இரவு பெரியார் நகரில் அவரது நண்பர் வீட்டில் பிறந்த நாள் நிகழ்சியில் கலந்துகொண்டுள்ளார். அதன் பின்னர், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டு இரவு நேரத்தில் நீண்ட நேரம் அமர்ந்துள்ளார். இதனை அந்த வீட்டில் உள்ளவர்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து காமராஜை அப்புறப்படுத்தியுள்ளனர். காமராஜ் குடிபோதையில், இருந்ததால் காவல்துறையினருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, காமராஜின் செல்போனை வாங்கிக்கொண்டு அடித்து போலீசார் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து, காமராஜும், அவரது மகன் சந்தோஷும், காவல்துறையினரைச் சந்தித்து ஏன் அடித்தீர்கள் எனக்கேட்டுள்ளனர். அப்போது, காவல்துறையினர் தந்தை, மகன் என இருவரையும் அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த காமராஜ், தனது கடைக்குச் சென்று சயனைடு விஷத்தை குடித்துள்ளார். இதையடுத்து, காமராஜை மீட்டு உடனடியாக காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, வட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், சிங்காரவேலு, விமலக்கண்ணன், சாகுல் அமீது, கிளை செயலாளர்கள் உஸ்மான், நீலமேகன், தினேஷ் பாபு, குமார், குமராட்சி, ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மணவாளன், தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவணன், நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர், மரணமடைந்த காமராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதுகுறித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையின் தாக்குதலால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட காமராஜ் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணமும், தற்கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)