
திருச்சி மாநகரில் சமீப காலமாக நடைபெற்றுவரும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட திருடர்களைக் கண்டுபிடிக்க திருச்சி மாநகரக் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு மேற்பார்வையில், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோரைக் கொண்டு இத்தனிப்படை செயல்பட்டுவருகிறது.
இந்தத் தனிப்படை காவல்துறையினரால், மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருச்சி புங்கனூர், காந்தி நகரைச் சேர்ந்த கிரிநாதன் என்பவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 39 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல், அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம், அவரது கவனத்தைத் திசைத்திருப்பி அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் செயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் நாலேமுக்கால் பவுன் தங்கச் செயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 47 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் 4 பவுன் தங்கச் செயின்கள் இரண்டு, ஒரு பவுன் மோதிரம் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 57 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் மூன்றேமுக்கால் பவுன் தங்கச் செயின், N.S.B. ரோட்டில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்க வந்த வயதான தம்பதியினரின் கவனத்தைத் திசைதிருப்பி அவர்களிடமிருந்து 5 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றைத் திருடிய ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், பெரிய கடை வீதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றவரை 6 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து, களவு போன நகை பறிமுதல் செய்யப்பட்டது. மாநகரில் பொன்மலை மற்றும் அரியமங்கலம் ஆகிய காவல் நிலைய கன்னக்களவு வழக்குகளில், சம்பவ இடத்திலிருந்து மாநகர விரல்ரேகை பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விரல்ரேகை பதிவுகளை ஒற்றை இலக்க விரல்ரேகை குற்ற பதிவேடுடன் ஒப்பிட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்படி திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 39 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர், மாநகர விரல்ரேகை பிரிவு துணை கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் நேரில் அழைத்து பணிப்பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்து பாராட்டினார்.