A person who was fired from a temporary passed away

Advertisment

நாகை அருகே ஆறு மாதத்திற்கு முன்பு ஊராட்சிச் செயலர் பதவியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூரத்தாங்குடி ஊராட்சி மேலநாகலூர் காலணி தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (44). இவர் கூரத்தாங்குடி ஊராட்சிச் செயலராக பணியில் இருந்த நிலையில், சரிவர பணிக்குச் செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த பொழுது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்துவந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று உறவினரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.