/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3099.jpg)
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள தொளார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அதனால் மின்சாரம் தடைப்பட்டது. அதனால், கிராம மக்கள் பலர் வீட்டுக்கு வெளியில் வந்து காற்றோட்டத்திற்காக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 2 மணி அளவில் தெருக்களில் சில மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து ஊர் இளைஞர்கள் மற்ற இளைஞர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து ஒருவருக்கு ஒருவர் தகவல் கொடுத்துக் கொண்டிருந்த போதே, முத்துராமன் என்பவர் வீட்டுக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் திருடுவதற்கு முயன்றுள்ளனர். வீட்டுக்குள் யாரோ நடமாடுவதைக் கண்ட முத்துராமன் மனைவி கண்ணகி, சத்தம் போட்டுள்ளார்.
இதை கேட்ட இளைஞர்கள், அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். இளைஞர்கள் வருவதைப் பார்த்த இரண்டு மர்ம நபர்களும் தப்பி ஓடினர். அவர்களை விடாது துரத்திச் சென்ற போது இருவரில் ஒருவர் மட்டும் இளைஞர்களிடம் பிடிபட்டார். மற்றொரு மர்ம நபர் தப்பிச் சென்றுவிட்டார். பிடிபட்ட அந்த மர்ம மனிதனை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து அவினங்குடி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திருட முயன்ற அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆவினன்குடி கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் சுப்பிரமணியன் என்பதும், தப்பி ஓடிய மற்றொரு நபர் அதே ஆவினன்குடி கிராமத்தைச் சேர்ந்த ராயதுரை மகன் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பி சென்ற மணிகண்டனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)