
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் பகண்டை கூட்ரோடு அருகே அமைந்துள்ள அரசு மாணவர் விடுதி அருகே சாலையோரம் நின்றிருந்த ஏழு வயது பெண் குழந்தை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களிடம் லிப்ட் கேட்டு கொண்டிருந்தது. பலர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றனர்.
ஆனால், மனிதாபிமானமுள்ள மனிதர் ஒருவர், தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அச்சிறுமியிடம் விசாரித்துள்ளார். அவரிடம், அந்த சிறுமி தொழுவம் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரது மகள் ரிச்சிகா என்றும் தாம் இரண்டாவது வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அக்குழந்தையால் விபரமாக பேச தெரியவில்லை. தனது தாய், அம்சாவை தேடி தனியாக நான்கு கிலோ மீட்டர் தூரம் அந்த சாலையில் நடந்து வந்துள்ளார். இதை புரிந்துகொண்டு, அந்த பெண் குழந்தையை பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள காவல்நிலையத்தில் கொண்டு வந்து அந்த மனிதர் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் அந்தக் குழந்தையிடம் அன்பாக பேசி உணவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பேசியுள்ளனர். அதன்பின், அந்தக் குழந்தை கூறிய தகவலையடுத்து அவரது தாய் அம்சா, தந்தை ராஜீவ்காந்தி ஆகியோருக்கு தகவல் அனுப்பி காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது குழந்தையின் தாய் அம்சா, தனது தாய் வீட்டிற்குச் சென்று இருந்ததார். வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் குழந்தை ரிச்சிகா தாயை தேடி தனியாக வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்தப் பெண் குழந்தையை அவரது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்து குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.