ADVERTISEMENT

ஏ.டி.எம்-ல் பணம் வராததால் எந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது...!

04:32 PM Oct 28, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ளது சிறு நெசலூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்பவரது மகன் ஜெய்சங்கர். 50 வயது உள்ள இவர், கூலித் தொழிலாளியாக கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை முன்பு உள்ள தேசிய வங்கியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்கு உள்ளே சென்றுள்ளார்.

அங்கு தனது ஏ.டி.எம். கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வரவில்லை. பலமுறை முயன்றும் பணம் வராததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் ஏ.டி.எம். இயந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வங்கியின் உள்ளே பணியில் இருந்த அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெய்சங்கரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் ஜெய்சங்கர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க பலமுறை முயன்றும் பணம் வரவில்லை என்ற கோபத்தால் அங்கு கிடந்த கருங்கல்லால் ஏ.டி.எம் எந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இப்படி செய்யலாமா என்று கேட்ட வங்கி காசாளர் அருண்குமாரை அசிங்கமாக திட்டியதாகவும் வங்கி காசாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்துள்ளனர். ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது சில நேரங்களில் இயந்திரக் கோளாறு காரணமாகவும் அல்லது இயந்திரத்தில் பணம் வைக்காமல் இருந்தாலும் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் பணம் வராது. இதை பொறுமையுடன் கையாள வேண்டும். அப்படி பணம் வரவில்லை என்றால் அந்த ஏடிஎம் மையத்தின் வங்கி அலுவலர்களிடம் விபரம் கேட்க வேண்டும். அதை விடுத்து ஏ.டி.எம். கார்டை போட்டதும் பணம் வரவில்லை என்ற கோபம் அடைந்து அந்த இயந்திரத்தை உடைத்துவிட்டு இப்போது சிறையில் சிக்கி தவிக்கிறார் ஜெய்சங்கர். ஆத்திரம் அழிவைத் தரும் கோபம் குடியைக் கெடுக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT