
சமீபத்தில் உருவான நிவர் புயலால் பொழிந்த கனமழையால், சென்னை மற்றும் புறநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டு, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நவம்பர் 30ஆம் தேதியான நேற்று பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெருங்குடி, மற்றும் முட்டுக்காடு முகதுவாரம் ஆகிய பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். முதல்வர் வருகையொட்டி வழி நெடுக்கிலும் ஏதோ நலதிட்ட விழாவுக்கு செல்வதுபோல சாலையின் நடுவே அ.தி.மு.க. கொடி கம்பம் நடும் பணி நடைபெற்றது.
இதில் ஈடுபட்டிருந்த நாவலூரை சேர்ந்த தியாகராஜன், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தார். விவரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவரம் அறிந்துவந்த உறவினர்களை முதல்வர் வரும்போது அசம்பாவிதம் ஏற்படாதவிதத்தில் தடுத்து வைத்திருந்தனர். தியகராஜனின் உடலை பார்க்க விடமால் தடுக்கப்பட்டதால் சற்று பதற்றம் நிலவியது. பின்னர் அப்பகுதி மாவட்ட செயலாளர் தலையிட்டு பேசி முடிக்கபட்டது. பரிதாபமாக பலியான தியாகராஜன், தே.மு.தி.க. நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கூட்டம், பொதுநிகழ்ச்சிக்காக கொடிகம்பம் பேனர் நடும்போது இது போல உயிர்பலி சம்பவம் ஏற்படுவது தொடர் கதையாகவுள்ளது.