/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_225.jpg)
விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்ராஜ்குமார் (34). கூலித் தொழிலாளியான இவர், தீவிர ரஜினி ரசிகர் என்று கூறுகிறார்கள்.ரஜினி அரசியலுக்கு வந்து முதலமைச்சராக போகிறார் என்று தனது நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அவ்வப்போது சந்தோஷமாக பேசி உற்சாகமாக இருந்துள்ளார் ராஜ்குமார்.
இதனிடையே ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து மிகவும் சோகத்துடன் இருந்த ராஜ்குமார், ‘தலைவர் இப்படி ஏமாற்றிவிட்டாரே’ என்று நண்பர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ராஜ்குமார், கடும் மன உளைச்சலுடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இவர், தினசரி முகநூலில் கருத்துக்களைப் பதிவு செய்வது வழக்கமாம். அதன்படி கடந்த 30ஆம் தேதி மாலை தனது முகநூல் பக்கத்தில் ‘ரஜினி தான் என் வாழ்க்கை இதுவே எனது கடைசி பதிவு’ என்று இரண்டு வரிகள் மட்டும் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு இரவு தூங்கச் சென்ற அவர், காலை படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்பிப் பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார்.
இந்தத் தகவல் கிடைத்ததும் விழுப்புரம் போலீஸார் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரது உடலை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ராஜ்குமார் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். ரஜினி அரசியலுக்கு வராமல் போன வருத்தத்தினால் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும் என்கிறார்கள் போலீஸார். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)