ADVERTISEMENT

ஊர்க் கோயிலுக்குப் பூட்டு; லூப் மோடில் கைதான கள்ளச்சாராய வியாபாரி

03:44 PM Dec 22, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரும்பத் திரும்ப போலீசில் கைதான விரக்தியில் ஊர்க் கோயிலை பூட்டுப்போட்டு பூட்டிய கள்ளச்சாராய வியாபாரி.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ளது கேசவநாயக்கன்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது கள்ளச்சாராய வியாபாரி ஆதிகேசவன். இவர் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திடீரென ஆதிகேசவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த ஆதிகேசவன் மீண்டும் தனது கள்ளச்சாராய விற்பனையைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்வதை அறிந்த மரக்காணம் போலீசார் ஆதிகேசவனை மீண்டும் கைது செய்து திண்டிவனம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். மீண்டும் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆதிகேசவன் சாராய வியாபாரத்தை துவக்கியுள்ளார். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் ஆதிகேசவனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆதிகேசவன், போலீஸிடம் தான் அடிக்கடி சிக்குவதற்கு காரணம் ஊர் மக்கள்தான் என்று ஆத்திரமும் விரக்தியும் அடைந்துள்ளார். நான் விற்பனை செய்யும் கள்ளச்சாராயத்தை இந்த ஊரைச் சேர்ந்த பலர் குடிக்கின்றனர். அதே நேரத்தில் போலீசாரிடம் ஊர்க்காரர்களே என்னை காட்டியும் கொடுக்கின்றனர். ஏன் இப்படி முரண்பாடாக நடந்து கொள்கிறீர்கள் என்று ஊர் மக்களிடம் நியாயம் கேட்ட ஆதிகேசவன் நேராகச் சென்று ஊர் பொதுமக்கள் அனைவரும் வழிபட்டு வந்த ஊர்ப் பொதுவில் உள்ள மாரியம்மன் கோவிலை இழுத்து பூட்டினார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு போலீசார் சம்பவம் நடந்த கோவிலுக்கு விரைந்து வந்து, ஆதிகேசவன் பூட்டி இருந்த பூட்டை உடைத்து கதவைத் திறந்து விட்டு பொதுமக்கள் சாமி கும்பிடுவதற்கு ஏற்பாடு செய்தனர். உடனே சாராய வியாபாரி ஆதிகேசவனை அழைத்த போலீசார் இனிமேல் இதுபோல் நடந்து கொண்டால் உன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆதிகேசவன் மீது இருபதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் வியாபாரி ஊர்ப் பொதுக் கோயிலுக்கு பூட்டு போட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT