வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென நுழைந்த நபர்; விக்கிரவாண்டியில் பரபரப்பு

person who enters a counting center with a fake identity card

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 24,171 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 8,825 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 1,763 வாக்குகளும் பெற்றுள்ளார்.

இதனிடையே, விக்கிரவாண்டியில் போலி அடையாள அட்டையை வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஒருவர் நுழைய முயன்றார். இதனை அறிந்த போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைபிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

byelection Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe