/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_162.jpg)
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் காட்டுசாகை கிராம பகுதியைச் சுற்றிலும் முந்திரி காடுகளே அதிகம். இப்பகுதி விவசாயிகளும் அதிகளவில் முந்திரி தோப்புகள் வைத்துள்ளனர். இந்தத் தோட்டங்களில் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருக்காது.
புலியூர் காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி(42). இவர், அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பதோடு அவருக்கு சொந்தமான நிலத்தில் முந்திரி விவசாயமும் செய்து வருகிறார். இவர் அவ்வப்போது இரவு நேரங்களில் முந்திரி காடுகளுக்குள் முயல் வேட்டைக்கு செல்வது உண்டாம். சம்பவத்தன்று இரவும் முயல் வேட்டைக்கு சென்றார் என சொல்லப்படுகிறது.
அதேசமயம், அன்றிரவு முந்திரிக் காட்டில் சில விவசாயிகள் இரவு நேரத்தில் மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளனர். அப்போது வாயில் நுரை தள்ளிய நிலையில் உத்திராபதி இறந்து கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து உத்திராபதி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குறைஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் உத்ராபதி இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் உத்திராபதி இடது காலில் பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறி வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)