
பார்சல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஹோட்டல் முதலாளியின் விரலைக் கடித்து துப்பிய சம்பவம் கமுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கலைச்செல்வி என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 17 ஆம் தேதியன்று, முஸ்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவர் சாப்பாடு வாங்க வந்துள்ளார். அந்த சமயம் ஓட்டலில் கூட்டம் அலைமோதியதால் சாப்பாடு பார்சல் கட்டுவதற்கு தாமதமாகி உள்ளது. இதனிடையே, அந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்க வந்த வழிவிட்டான், "யோவ்... எவ்வளவு நேரம்யா இங்கேயே நிக்குறது. நமக்கு ஆயிரம் சோலி இருக்கு, சீக்கிரம் பார்சல் பண்ணி கொடுங்கய்யா” என கடிந்த குரலில் அதட்டியுள்ளார். அப்போது, மற்றவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த கடையின் உரிமையாளர் கதிரேசன், "பொறுப்பா... எதுக்கு இவ்வளவு அவசரப்படுற கொஞ்ச நேரத்துல கட்டிக் கொடுக்குறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, வழிவிட்டானுக்கும் உரிமையாளர் கதிரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வழிவிட்டான், அங்கிருந்த சாம்பார் கரண்டியை எடுத்து கதிரேசனின் தலையிலேயே சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது, இவர்களுக்குள் மோதல் அதிகமாகவே கதிரேசனின் இடது ஆள்காட்டி விரலை கடித்து அங்கிருந்த சாக்கடையில் துப்பிய வழிவிட்டான், உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்ட கதிரேசனை உடனடியாக கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கமுதி காவல் நிலைய போலீசார், தப்பியோடிய வழிவிட்டான் என்பவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பார்சல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய சம்பவம் கமுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.